உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து நீதிமன்றங்களுக்கும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு சாத்தியமல்ல

அனைத்து நீதிமன்றங்களுக்கும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு சாத்தியமல்ல

சென்னை:'தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்குவதற்கு சாத்தியமில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு தொடர்பாக, அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. உயர் நீதிமன்றத்துக்கு, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி, உயர் நீதிமன்றத்துக்கு சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக, அவ்வப்போது உயர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்து வருகிறது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விசாரணை நீதிமன்றங்களில், மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும். நீதிமன்றங்களில் இருந்து குற்றவாளிகள் தப்பி ஓடுவதும் நடக்கிறது. எனவே, அனைத்து நீதிமன்றங்களுக்கும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்புக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களுக்கு, மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை என்றும், முதல் பெஞ்ச் தெரிவித்தது. கீழமை நீதிமன்றங்களில் உரிய பாதுகாப்பை உறுதி செய்யவும், நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிட்டிருப்பதாக, முதல் பெஞ்ச் கூறியது.வழக்கு விசாரணையை, ஜூலை 18க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை