விஜய் கட்சியை தடுக்க தி.மு.க., முயற்சிக்கவில்லை
மதுரை:''விஜய் கட்சி துவக்கியதை தடுக்க தி.மு.க., முயற்சிக்கவில்லை. மக்களுக்காக பாடுபடுவோரே தேர்தல் நேரத்தில் வெற்றி பெறுவர்,'' என, விஜய் கட்சி குறித்த கேள்விக்கு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு பதிலளித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: நடிகர் விஜய் கட்சி துவக்கியதை தடுக்க தி.மு.க., முயற்சிப்பதாகக் கூறுவது தவறு. அவர் கட்சி துவக்குவதாக அறிவித்ததும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொன்னார். அமைச்சர் உதயநிதியும், நண்பருக்கு வாழ்த்து என கூறினார். அப்படியொரு மனப்பக்குவம் தி.மு.க.,வினருக்கு தான் உள்ளது. அரசியலுக்கு வரும் நடிகர் விஜயை தடுக்கும் நோக்கம் எதுவும் தி.மு.க.,வுக்கு இல்லை.கட்சி ஆரம்பிப்பது ஜனநாயக உரிமை. அந்த வகையில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். தி.மு.க., என்பது தமிழர்களின் வளர்ச்சி, வாழ்வாதாரத்திற்காக உருவான இயக்கம். தி.மு.க., 75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கொண்டாடும் ஒரே கட்சி. அதனால், அக்கட்சியினர் யாரையும் கண்டு அஞ்சவோ; பொறாமைப்படவோ தேவையில்லை. நடிகர்கள் இனி நாடாள முடியுமா என்று கேட்கின்றனர். என் அனுபவத்தில் தேர்தலைப் பொறுத்தவரை மக்களின் பிரச்னையை தீர்க்க முயற்சிப்போரையே, அவர்கள் ஆதரித்து தேர்ந்தெடுப்பர். தமிழகத்தில் தி.மு.க.,வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கி வெற்றி பெற்றார். அவரை அரசியல்வாதியாகத்தான் மக்கள் பார்த்தனரே தவிர, நடிகராகப் பார்க்கவில்லை. அவருக்குப் பின் எத்தனையோ பேர் கட்சி துவக்கினர். தேர்தலில் நின்றனர். ஆனாலும், இந்த மண்ணைச் சார்ந்த விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்கூட எட்டிப் பிடித்தார். யார் மக்கள் பிரச்னைக்காக பயணிக்கிறார்களோ, அது தான் தேர்தல் நேரத்தில் ஓட்டாக மாறும். அதை விடுத்து, எந்த நோக்கில் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்குகிறார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.