| ADDED : ஜூலை 13, 2024 03:32 AM
சென்னை: மத்திய தொல்லியல் துறை ஆலயப்பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:கீழடி அகழாய்வு இன்று உலகம் முழுக்க பேசப்பட காரணம், அது, கண்டுபிடிக்கப்பட்ட விதம் தான். அதாவது, கீழடியில் அகழாய்வை துவக்குவதற்கு முன், வைகை நதியின் இரு கரைகளிலும், ஓராண்டு முழுக்க விரிவான கள ஆய்வு செய்தோம்.அதில், 200க்கும் மேற்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கண்டறிந்தோம். இதன்பின், தொல்பொருட்கள் மிகுதியாக கிடைக்கும் என அறிந்த பிறகே, கீழடியில் அகழாய்வை துவக்கினோம்.அதேபோல, காவிரி ஆற்றங்கரையிலும் விரிவான கள ஆய்வை, தமிழக தொல்லியல் துறை செய்ய வேண்டும். காவிரி கரையிலும் நிறைய பழங்கால நகரங்கள் இருந்திருக்கலாம்.இது குறித்த முழுமையான தகவல் ஏதும் இதுவரை சேகரிக்கப்படவில்லை. தற்போது, கடலுார் மாவட்டம் மருங்கூரில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்கிறது. ஏற்கனவே, தொல்லியல் துறை மாணவர்கள் ஆங்காங்கே பகுதி பகுதியாக கள ஆய்வு செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில், காவிரி துவங்கும் இடத்தில் இருந்தே, நாம் கள ஆய்வு செய்ய வேண்டும்.அகழாய்வுக்கு அனுமதி பெறுவதில், மற்ற மாநிலங்களில் சிக்கல் எழுந்தால், தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையில் முழுமையாக ஆய்வு செய்து, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்த வேண்டும். இதனால், மிக முக்கிய சான்றுகள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.-