ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126வது மலர் கண்காட்சியை மாநில தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா நேற்று துவக்கி வைத்தார். மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட மலர்கள், பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார்.பூங்கா வளாகத்தில் குழந்தைகளை கவரும் வகையில், 44 அடி அகலம், 35 அடி உயரத்தில் 'டிஸ்னி கேசில்' பிரமாண்டமான உருவம், அதன் கதாபாத்திர உருவங்களான, 'மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூபி, புளூட்டோ, டொனால்ட் டக்,' ஆகியவை ஒரு லட்சம் கார்னேசன், கிரைசாந்திமம், ரோஜா, மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மலர்களால் உருவான மலை ரயில்
'யுனெஸ்கோ' அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலின் நீராவி இன்ஜின் உருவம், 80,000 கார்னேசன், கிரை சாந்திமம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.தவிர, பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முயல், மலருடன் கூடிய தேனீ ஆகியவையும், மலர் தொட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் சுவர், பிரமிடு மற்றும் பூங்கொத்து ஆகியவையும் சிறப்பு அம்சமாக உள்ளது.மேலும், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன், பாத்திகளில், 270 ரகங்களில், 'இன்கா மேரி கோல்டு, டேலியா, டெய்சி, ஜின்னியா, ருகன்டிடப்ட், ஸ்டாக், சால்வியா, அஜிரேட்டம், டெய்சி ஒயிட், டெல்பினியா, அந்துாரியம்,' என, 10 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 15,000 தொட்டிகளில் லில்லியம்
பூங்கா மாடங்களில், 'பிரஞ்சு மேரி கோல்டு, குட்டை சால்வியா, ஸ்டாக், மஞ்சள் டெய்சி,' உள்ளிட்ட, 40,000 மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒயிட், மஞ்சள், ஆரஞ்சு, பிங்க் நிறங்களில், 15,000 தொட்டியில் லில்லியம் மலர்கள் மாடங்களில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதனை பல்லாயிரம் சுற்றுலா பயணியர் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதேவேளையில் கடந்த ஆண்டுகளை விட முதல்நாளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'இம்முறை, 10 நாட்கள் மலர்கண்காட்சி நடப்பதால் கெடுபிடி இல்லாமல் சுற்றுலா பயணியர் வந்து செல்லலாம். இம்மாதம், 20ம் தேதி மலர் கண்காட்சி நிறைவு பெறுகிறது' என்றனர்.விழாவில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, கலெக்டர் அருணா உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் போது, மாநில தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா கூறுகையில், ''நீலகிரிக்கு எவ்வளவு வாகனம் எங்கிருந்து வருகிறது என்பதற்காக தான் இ - பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. இ - பாஸ் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. நீலகிரி பசுமை நிறைந்த மாவட்டமாகும். பசுமையை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துடன் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. மேலும், பூங்காவில், 150 ரூபாய் நுழைவு கட்டணம் உயர்வால் உள்ளூர் மக்கள் பாதிப்பதாக கூறினர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
ரோஜா கூட்டம்: பார்வையாளர்கள் பரவசம்
ஊட்டியில், 19வது ரோஜா கண்காட்சி துவங்கியது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்காவில், 80,000 பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு, வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், பல்வேறு வன உயிரினங்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.அதில், யானை, காட்டெருமை, மான், நீலகிரி தார், புலி, பாண்டா கரடி, ஆந்தை மற்றும் புறா போன்ற வடிவங்கள் 'வன உயிரின பாதுகாப்பு' என்ற கருத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், கண்கவர் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. வரும், 19ம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடக்கிறது.