சென்னை:“இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தமிழகம் தக்கவைத்துள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக, 706.50 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 'சிப்காட்' மெகா குடியிருப்பு வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது. குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து, முதல்வர் பேசியதாவது:'பாக்ஸ்கான்' குழுமத்தின் சிறப்பான இந்திய செயல்பாடுகளுக்காக, அதன் தலைவர் யாங் லீயுவுக்கு, 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பாராட்டுகள். பாக்ஸ்கான் நிறுவனம், புகழ் பெற்ற 'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உதிரிபாகங்களை பொருத்தி ஒருங்கிணைக்கிறது.ஸ்ரீபெரும்புதுாரில் இரண்டு உற்பத்தி அலகுகளை நிறுவி உள்ளது. இந்நிறுவனத்தில், 41,000 பேர் பணிபுரிகின்றனர். அதில், 35,000 பேர் பெண்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும் விட, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 42 சதவீதம்.பணிக்கு செல்லும் தாய்மார்கள் நலன் கருதி, சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில், ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. மேலும், சிப்காட் நிறுவனம், நேரடியாக குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்த முடிவெடுத்து இருக்கிறது.'நிடி ஆயோக்' அமைப்பின் 2023 - 24ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில், தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. மேலும், 10 குறியீடுகளிலமுன்னிலை வகிக்கிறது.கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9.19 சதவீதம் பங்களிப்போடு, தமிழகம் இந்தியாவிலே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தக்கவைத்துள்ளது. பன்முகத்தன்மையோடு தொழில் துறைக்கு சாதகமான, எல்லா அம்சங்களும் ஒருங்கே அமைந்த மாநிலமாக, தமிழகம் விளங்கி வருகிறது.தொழில் வளர்ச்சி வழியாகத்தான் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதாரமும் விரைவான வளர்ச்சி பெறும். அதனால் தான் தொழில் வளர்ச்சியில், நாங்கள் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் தொழிற் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில், புதிதாக அமைக்க முடிவெடுத்துள்ளோம்.அதேபோல் 45,000 ஏக்கர் நில வங்கி உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 41,000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 12,500 ஏக்கர் நிலங்கள், சிப்காட் நில வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு முதல்வர் பேசினார்.கோவில் பிரசாதம்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து காரில் முதல்வர் ஸ்டாலின் சென்றார். அந்த வழியில் உள்ள வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோவில் முன் முதல்வர் கார் வந்ததும், கோவில் நிர்வாகம் சார்பில், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ் தலைமையில் அர்ச்கர்கள், பூஜை செய்யப்பட்ட அர்ச்சனை பிரசாதங்களை முதல்வருக்கு வழங்கினர்.
மெகா குடியிருப்பு வளாகம்!
இந்தியாவிலேயே முதல் முறையாக, சிப்காட் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில், தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்காக, 706.50 கோடி ரூபாயில், 18,720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது.மொத்தம் 22.48 லட்சம் சதுர அடி பரப்பில், தரைதளம் மற்றும் 10 அடுக்குமாடி கட்டடமாக, 20 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பிரிவுகளைக் கொண்ட கட்டடத்தில், ஒவ்வொரு பிரிவிலும் 1,440 பேர் தங்கும் வகையில், 240 அறைகள் உள்ளன.இத்திட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 498 கோடி ரூபாய்; மத்திய அரசு சார்பில் 37.44 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இங்கு, பாக்ஸ்கான் நிறுவன பெண் பணியாளர்கள் தங்க, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.குடியிருப்பு வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்; பெண் பணியாளர்களிடம் குடியிருப்பு சாவிகளை வழங்கினார்; குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.