சென்னை:செங்கல்பட்டு அருகே, 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில், வரலாற்று ஆய்வாளர் சங்கத்தைச் சேர்ந்த, செய்யாறு அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் மதுரைவீரன் தலைமையில், தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள், கடந்த வாரம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பட்டாளம் அருகேயுள்ள நீலமங்கலம் என்ற ஊரில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் ஆங்காங்கே இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து, மதுரைவீரன் கூறியதாவது:கடந்த 4,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், இறந்தவர்களை புதைத்த பகுதிகளில், கற்களை வட்டமாக அடுக்கி அடையாளப்படுத்தி, ஈம காரியங்களில் ஈடுபட்டனர். அவ்வாறு வட்டமாக கற்களை அடுக்கும் முறையை கல்வட்டம் என்பர்.அதேகாலத்தில், கல்பதுகை, கல்திட்டை, கல்கிடை உள்ளிட்ட முறைகளும் இருந்தன. இவற்றின் அமைப்பையும், ஈமச்சடங்குக்கு பயன்படுத்திய பொருட்களையும் வைத்து, அவர்கள் வாழ்ந்த காலத்தையும் பண்பாட்டையும் அறிய முடியும். அந்த வகையில், இங்கு பழமை மாறாத, 10க்கும் மேற்பட்ட கல்வட்டங்களை அடையாளப்படுத்தி உள்ளோம். அவை, 15 முதல் 20 அடி சுற்றளவில் உள்ளன.இவை, மற்ற இடங்களில் கண்டறியப்பட்டு உள்ள கல்வட்டங்களை விட பெரிதாக உள்ளன. இந்த கல்வட்டங்களில் இருந்து, இங்கு 4,500 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.இப்பகுதியில், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். தொடர் பயன்பாட்டுக்கு வந்து கல்வட்டங்கள் அழியும் முன், தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்தால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும், சான்றுகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.