| ADDED : ஜூலை 28, 2024 12:15 AM
சென்னை:தமிழக மின் வாரியத்தில் மின் இயக்கம், மின் பகிர்மானம், மின் உற்பத்தி, மின் திட்டங்கள், நிதி ஆகிய பிரிவுகள் உள்ளன. இவை, தலா ஒரு இயக்குனரின் கீழ் செயல்படுகின்றன. மின் தொடரமைப்பு கழகத்தில் இயக்குனர், மேலாண் இயக்குனர் பதவிகள் உள்ளன.காலியிடங்களுக்கு ஏற்ப தலைமை பொறியாளராக இருப்பவர்களில் ஒருவரை, இயக்குனர் பதவிக்கு தமிழக அரசு நியமிக்கும். மின் இயக்கம், மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குனராக இருந்த அதிகாரிகள், மார்ச்சில் ஓய்வு பெற்றனர். இதனால், அந்த பதவிகள் மார்ச் முதல் காலியாக உள்ளன. மின் பகிர்மானம், மின் உற்பத்தி இயக்குனர்கள் பதவி மே முதலும்; மின் திட்டங்கள் இயக்குனர் பதவி ஜூன் முதலும் காலியாக உள்ளன. தலைமை பொறியாளர்களாக இருப்பவர்கள், இயக்குனர்கள் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். எனவே, காலியாக உள்ள பதவிகளுக்கு, திறமையானவர்களை விரைந்து நியமிக்குமாறு, அரசுக்கு பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.