வீட்டு வசதி சங்கங்களில் கடனை செலுத்தியும் பத்திரம் கிடைக்காமல் 5100 பேர் தவிப்பு
சென்னை:கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் நிலுவையை செலுத்திய பின்னும் பத்திரம் கிடைக்காமல் 5100 பேர் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இவற்றில் கடன் பெற்றவர்கள் தவணை தவறியதால் அபராத வட்டி உள்ளிட்டவை விதிக்கப்பட்டன. இதனால் நிலுவை தொகை பல மடங்காக அதிகரித்தது. அபராதம் அதிகரித்த நிலையில் நிலுவை தொகையை செலுத்த உறுப்பினர்கள் தயங்கினர்.இதையடுத்து, அபராத வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி நிலுவை தொகையை முறையாக செலுத்திய மக்களுக்கு கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக அபராத வட்டி தள்ளுபடி திட்டம் 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு பத்திரம் திருப்பித் தரப்படவில்லை.இதுகுறித்து கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:முதல்முறையாக அபராத வட்டி தள்ளுபடி செய்த சமயத்தில் கடன் தொகையை செலுத்தியவர்களுக்கு மிக தாமதமாக கடன் பத்திரங்கள் கிடைத்தன. இரண்டாம் கட்டத்தில் 2023 வரை கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு பத்திரங்கள் கிடைக்கவில்லை.சங்கங்கங்களில் உறுப்பினர் கணக்கில் நிலுவை தொகை முழுமையாக வசூலாகி இருந்தாலும் கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தில் அந்தந்த சங்கங்கள் பெயரில் உள்ள கடன் கணக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன. சங்கங்களுக்கும் இணையத்துக்கும் இடையிலான இப்பிரச்னையால் தான் உறுப்பினர்களுக்கு பத்திரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.