சென்னை : தமிழகத்தை சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், 561 வழக்குகளும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 20 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், பல சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு, உயர் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று இழுத்தடிக்கும் நிலைமையும் நீடிக்கிறது. எனவே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க ஏதுவாக, அவற்றை கண்காணிக்கும்படி, உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை; அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன என்பது குறித்த விபரங்களை அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் விபரங்கள், அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.அறிக்கையில், 'மாநிலம் முழுவதும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், 561 வழக்குகளும்; ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 20 வழக்குகளும் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன; ஒன்பது வழக்குகளில் சாட்சிகள் விசாரணை முடியும் நிலை உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.இதை பரிசீலித்த முதல் பெஞ்ச், புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கவும், குற்றச்சாட்டு பதிவுக்காக உள்ள வழக்குகளில், விரைந்து பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய, விசாரணையை, ஜூன், 20 க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.