| ADDED : ஏப் 02, 2024 02:35 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால், 8,000 ஆமை முட்டைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பால் இரண்டாம் நாளான நேற்றும் ராட்சத அலைகள் எழுந்ததால், தனுஷ்கோடி முதல் அரிச்சல் முனை வரை 5 கி.மீ.,க்கு ஆங்காங்கே சாலையில் பாறாங்கற்களின் உடைந்த சிறிய துகள்கள் பரவி கிடக்கின்றன. இதனால், நேற்று தனுஷ்கோடி செல்ல பக்தர்கள், சுற்றுலா பயணியருக்கு போலீசார் தடை விதித்தனர்.தனுஷ்கோடி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்து, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடல் நீர் சூழ்ந்தது. தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம், கம்பிபாடு கடற்கரையில் வனத்துறையினர் அமைத்துள்ள பாதுகாப்பு வேலிக்குள், 8,000 ஆமை முட்டைகளை புதைத்து வைத்திருந்தனர்.இந்த பாதுகாப்பு வேலிக்குள் கடல் நீர் குளம் போல் தேங்கியதால், முட்டைகளுக்கான வெப்ப சீதோஷ்ண நிலையின்றி குஞ்சுகள் பொரிக்க வாய்ப்பின்றி அழிந்து போகக் கூடும் என்று கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.எனினும், 'வேலிக்குள் தேங்கிய கடல்நீரை வெளியேற்றி உள்ளோம். இப்பகுதியில் மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் முட்டைக்கு இயற்கையான வெப்ப சலனம் கிடைக்கக் கூடும். எனவே முட்டையில் இருந்து எதிர்பார்த்தபடி குஞ்சுகள் பொரிக்கும்' என வனத்துறையினர் தெரிவித்தனர். நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு கடற்கரை பகுதிகளில் இரு நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. சுற்றுலா மையமான கன்னியாகுமரியிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பயணியர் கடலில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை, படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.