முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 93 சதவீதம் தபால் ஓட்டு
சென்னை:தமிழகத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 93.14 சதவீதம்; மாற்றுத்திறனாளிகள், 93.58 சதவீதம் பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கியது. அதை ஏற்று வீட்டிலிருந்து ஓட்டளிக்க, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 71,352 பேர்; மாற்றுத்திறனாளிகள் 43,788 பேர் சம்மதம் தெரிவித்து, முறைப்படி விண்ணப்பம் வழங்கினர்.அவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களிடம் தபால் ஓட்டு வழங்கி, அதில் அவர்கள் ஓட்டளித்த பின், தபால் பெட்டியில் பெறும் பணி மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. தபால் ஓட்டை பெற, ஓட்டுச்சாவடி அலுவலருடன், போலீசார், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் செல்கின்றனர்.அதன்படி, நேற்று முன்தினம் வரை, 85 வயதுக்கு மேற்பட்டோர் 66,461 பேர், தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்; இது 93.14 சதவீதம். மாற்றுத்திறனாளிகள் 40,971 பேர் ஓட்டளித்துள்ளனர்; இது 93.58 சதவீதம்.தபால் ஓட்டுகளை பெறும் பணி, நாளையுடன் நிறைவடையும். விண்ணப்பம் அளித்தவர்கள் வீட்டுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர், இரண்டு முறை மட்டும் செல்வார். இரண்டு முறையும் அவர்களை சந்திக்க முடியாவிட்டால், அவர்கள் தபால் ஓட்டளிக்க இயலாது. ஓட்டுச் சாவடிக்கு சென்றும் ஓட்டளிக்க முடியாது.