சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற, கிழக்கு தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி, தோஷிதா லட்சுமி அளித்த பேட்டி:இன்ஜினியரிங் தரவரிசைப் பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிளஸ் 2வில், கணினி அறிவியல் பாடப்பிரிவில், 600க்கு, 598 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பிரெஞ்சு ஆகிய பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண்களும்; ஆங்கிலத்தில், 98 மதிப்பெண்களும் பெற்றேன். 10ம் வகுப்புத் தேர்வில், 500க்கு 480 பெற்றிருந்தேன்.பிளஸ் 2வில், பள்ளியில் அளித்த பயிற்சியுடன், வீட்டிலும் திட்டமிட்டு படித்தேன். பள்ளியில் நடத்திய திருப்புதல் தேர்வுகளுக்கு, பொதுத்தேர்வு போன்று தயாரானது, அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்தது. பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.என் தந்தை நாகராஜன், சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். தாய் ராதிகா, இல்லத்தரசியாக உள்ளார். அண்ணன் சந்தீப் குமார் இ.சி.இ., முடித்து விட்டு, பிட்ஸ் பிலானி கல்லுாரியில், முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ளார். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அண்ணா பல்கலையில், இ.சி.இ., படிப்பில் சேர முடிவு செய்துள்ளேன்.என் அண்ணன் இ.சி.இ., படித்தபோது, வீட்டில் வைத்து, பல அறிவியல் 'ப்ராஜக்ட்'கள் செய்வார். அதைப் பார்த்து எனக்கும், எலக்ட்ரானிக்ஸ் துறை மீது ஆர்வம் அதிகரித்தது. எனக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதையே படிக்குமாறு, என் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறை, அடிப்படை இன்ஜினியரிங் படிப்பாக உள்ளதால், அதைப் படித்தால், சிறந்த எதிர்காலம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.