ரேஷன் கடைகளில் பால் பொருள் விற்பனை 35 ஆண்டுகள் பின்னோக்கி போகும் ஆவின் பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை:'ரேஷன் கடைகளில் பால் பொருட்கள் விற்பனை வாயிலாக, ஆவின் நிர்வாகம், 35 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது' என, தமிழக பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: ரேஷன் கடைகளில், ஆவின் பால் பொருட்கள் விற்கப்படும் என்று, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இது, வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டிய ஆவின், 35 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்வது போல இருக்கிறது.ரேஷன் கடைகள், அமுதம் அங்காடி, கூட்டுறவு அங்காடிகளில், 35 ஆண்டுகளுக்கு முன் ஆவின் பால் பொருட்கள் விற்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், காலாவதியாகி விற்பனையாகாத, சேதமடைந்த பால் பொருட்களை, ஆவின் நிர்வாகம் திரும்ப பெறவில்லை. இதனால், கூட்டுறவு அங்காடிகளில் இருந்து வரவேண்டிய பல லட்சம் ரூபாய் நிலுவை தொகை நின்று போனது. இதையடுத்து, 1992ல் கூட்டுறவு அங்காடிகளுக்கு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன்பின், மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள் வாயிலாக, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியது. தனியார் மற்றும் வெளிமாநில கூட்டுறவு நிறுவனங்களுடன் ஆவின் நிர்வாகத்தால் போட்டி போட முடியவில்லை. குளிர்சாதன அறையில் அமர்ந்து, அரசு சார்ந்த துறைகளில் ஆவின் பொருட்களை அதிகாரிகள் விற்க முயல்வது வேடிக்கையாக உள்ளது. இது, ஆவின் நிர்வாகத்தின் இயலாமையை காட்டுகிறது. தேவை அதிகமுள்ள பால், நெய், வெண்ணெய், பனீர் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய முடியாமல் ஆவின் தள்ளாடுகிறது. அமைச்சர் பதவியை தக்கவைக்க, எதையாவது பேசி வைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பேசுகிறார். ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பொதுமக்களுக்கு சரிவர வினியோகம் செய்ய முடியாமல், அரசு நிர்வாகம் அல்லப்படுகிறது. இந்த நேரத்தில், ஆவின் பொருட்களை அங்கு விற்பனை செய்ய ஆர்வம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு பொன்னுசாமி கூறியுள்ளார்.