உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதியான காலத்தில் அரசியலில் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் நடிகர்கள் *நடிகர் விஜயை தாக்கும் திருமாவளவன்

காலாவதியான காலத்தில் அரசியலில் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் நடிகர்கள் *நடிகர் விஜயை தாக்கும் திருமாவளவன்

கம்பைநல்லுார்:“நடிகர்கள் சிலர், காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பூமிசமுத்திரத்திலுள்ள பட்டாசு குடோனில், கடந்த, 24ல் ஏற்பட்ட வெடி விபத்தில், கம்பைநல்லுாரை சேர்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய, 3 பெண்கள் பலியாகினர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, கம்பைநல்லுார் வந்த வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், அவர்களின் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா, 1.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.பின், நினைவேந்தல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:மொத்தத்தில், 35 ஆண்டுகள் ஒரு மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற, பெரும் பாடுபட வேண்டியிருந்தது. சில பேர், 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து, பொருள், தேடினர். இளமை காலத்தில் சொகுசாக வாழ்ந்த அவர்கள், தேவையான அளவுக்கு சொத்தும் சேர்த்த பின், காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். கட்சியை துவங்கி, உடனே ஆட்சி அமைக்க விருப்பப்படுகின்றனர். ஆனால், என்னுடைய வாழ்க்கை அப்படியில்லை. இளமையை முழுமையாக தொலைத்து, துாங்க வேண்டிய நேரத்தில் துாங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், வாழ வேண்டிய நேரத்தில் வாழாமல், ஓய்வு எடுக்காமல், பொழுதுபோக்கு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்க்கை நகர்ந்து விட்டது. கிடைக்கிற கஞ்சியை குடித்து கொண்டு, நாள் ஒன்றுக்கு, 3, 4 மணி நேரம் உறங்கி, 35 ஆண்டு காலம் பாடாய் பட்டு, வாழ்க்கையை முழுமையாக தொலைத்து, இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். ஒரு மாநிலக் கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற, இவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்ததோடு, ஏராள இழப்பையும் சந்தித்திருக்கிறேன். கொள்கையில் தெளிவு இருக்கிறது. அதனால், யாரும் என்னை விலைக்கு வாங்க முடிவில்லை. நான் சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால், என்றோ கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருப்பேன். வரும், 2026 சட்டசபை தேர்தலில், வி.சி., இல்லாமல், எந்த அரசியல் நகர்வும் இருக்காது என்பது காலத்தின் கட்டாயம். அரசியல் வல்லுநர்கள் கருத்தும் இதுதான். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை