சென்னை:சென்னையில், ஐ.ஏ.எஸ்., --- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, கட்டுமான தொழிலாளி போலவும், ஹோட்டல் ஒன்றில் சலவை தொழிலாளி போலவும் பதுங்கி இருந்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அல்குவைதா ஆதரவு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.மேற்கு வங்க மாநிலத்தில் அல்குவைதா ஆதரவு அமைப்பான, 'அன்சார் அல் இஸ்லாம்' பயங்கரவாதிகள், சட்ட விரோத செயலுக்கு சதித் திட்டம் தீட்டி உள்ளனர். அவர்கள் வங்கதேசத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நம் நாட்டில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது குறித்து, அம்மாநில போலீசாருக்கு தெரிய வந்தது. வேட்டை
இதுகுறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் எஸ்.டி.எப்., என்ற சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த ஹபிபுல்லா, 21, என்ற அன்சார் அல் இஸ்லாம் பயங்கரவாதியை கைது செய்தனர்.அவர் அளித்த வாக்குமூலத்தில், 'எங்கள் கூட்டாளிகள் பல மாநிலங்களில் பதுங்கி உள்ளனர். அவர்கள், 'எக்ஸ்' தளம், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளம் வாயிலாக, முஸ்லிம் இளைஞர்களை சேர்த்து வருகின்றனர். 'அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, வெடிகுண்டு தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர். என் வலது கரமாக அனோவர் ஷேக், 30, அஜிசுல், 26, ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, அஜிசுல் மற்றும் அனோவர் ஷேக் மீது, மேற்கு வங்க மாநிலம் காங்க்சா காவல் நிலையத்தில், 'உபா' என்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உட்பட, எட்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். அதில், அஜிசுல் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில், அனோவர் ஷேக், கட்டுமான தொழிலாளி போல சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரின் மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. சில தினங்களுக்கு முன், புதிய 'சிம் கார்டு' ஒன்றை வாங்கி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உறவினரிடம் அனோவர் ஷேக் பேசி உள்ளார். அதன், 'டவர் லொகேஷன்' சென்னை கோயம்பேடு மற்றும் விருகம்பாக்கம் பகுதியைக் காட்டி உள்ளது.இதையடுத்து, மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப்படை டி.எஸ்.பி., பிகஸ் கண்டி டேவ் தலைமையில் நான்கு போலீசார் சென்னையில் முகாமிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சென்னை போலீசாரும் உதவி செய்தனர்.இரு தரப்பினரும் நடத்திய விசாரணையில், பயங்கரவாதி அனோவர் ஷேக், கோயம்பேடு பகுதியில் இருந்து சின்மயா நகர், விருகம்பாக்கம் வழியாக ஆற்காடு சாலை செல்லும் காளியம்மன் கோவில் சாலையில் உள்ள, 'கிராண்ட் டவர்' ஹோட்டலில், சலவை தொழிலாளி போல பதுங்கியிருப்பது தெரியவந்தது. விசாரணை
அவரை இரு தினங்களுக்கு முன் பிடித்து, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறியுள்ளதாவது:மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, பிப்., 22ல் ரயிலில் சென்னை வந்தேன். விருகம்பாக்கம் நடேசன் நகர் மேற்கு பகுதியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் அருகே கட்டுமான பணிகள் நடக்கின்றன. அங்கு கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். கோர்ட்டில் ஆஜர்
ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பார்வையில் பட்டால் மாட்டிக் கொள்வோம். இதனால், அந்த இடத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, ஒன்றரை மாதம் முன், கிராண்ட் டவர் ஹோட்டலில் சலவை தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து, எங்கள் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, மேற்கு வங்க சிறப்பு அதிரடிப்படை போலீசார், அனோவர் ஷேக்கை நேற்று காலை 10:45 மணியளவில் முறைப்படி கைது செய்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஜெகதீசன் முன் ஆஜர்படுத்தினர். கோர்ட் அனுமதி பெற்று, அவரை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.