| ADDED : ஜூலை 23, 2024 09:07 PM
நாகர்கோவில்:''நவ., டிச.,ல் தமிழக பா.ஜ.,வில் அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்படுவர். இது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நடைமுறை,'' என, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காப்புகோட்டில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பிரதமர் மோடி அரசின் 3.0 ல் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சாதனையை படைத்துள்ளது. தனிநபர் வரி மாற்றப்பட்டுள்ளதால் பணசேமிப்பு புதிய அறிவிப்பின்படி நடக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு ரூ.மூன்று லட்சம் கோடி ஒதுக்கியது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகும். ஒரு கோடி இளைஞர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த கம்பெனிகளில் பணிபுரிய உள்ளனர். சென்னை உட்பட 14 பெரிய நகரங்களுக்கு சிறப்பு பட்ஜெட் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு கோடி வீடுகள் நகர பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வர இருப்பதும் வரவேற்கதக்கது.அமராவதியில் புதிய நகரத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியது அமராவதியை மேம்படுத்துவதாக தான் கருதுகிறேன்.காங்கிரசார் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி வளர்ச்சி என்று தான் இருந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இலவசம் இலவசம் என்று தான் இருந்துள்ளது.உச்சநீதிமன்றம் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் 'நீட்' தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அது 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலில் இருந்து தெரிகிறது.தமிழகத்தில் நேர்மையான அரசியல் நடக்கவில்லை. இதனால் தினமும் போராட்டம் அதிகம் நடக்கிறது. இளைஞர்கள் பெரிய ஏக்கத்துடன் உள்ளார்கள். நாளைக்கே மாற்றம் வரவேண்டும் என நினைக்கிறார்கள் என்றார்.