செங்கல்பட்டு:கள்ளச்சாராயம் காய்ச்சிய விவசாயியை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சித்தாமூர் போலீசார் சோதனை செய்த போது, தேவன், 55, என்ற விவசாயி, அவரது வயலில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.அவர், சாராயம் காய்ச்ச வைத்திருந்த, 200 லிட்டர் ஊறல் மற்றும் கள்ளச்சாராயம் 20 லிட்டரை போலீசார் கைப்பற்றி அழித்ததுடன், அவரையும் கைது செய்தனர். பரிசோதனை
அவரிடம் நடத்திய விசாரணையில், விவசாய வேலைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அய்யனார், 50, பெருமாள், 45, மணி, 52, என்ற மூன்று பேர், தேவன் காய்ச்சிய கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தது தெரியவந்தது. அந்த மூன்று பேரையும் பிடித்து, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்ததில் எந்த பாதிப்பும் இல்லை என்று, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர், மழுவங்கரணை கிராமத்தில் முகாமிட்டு, மது அருந்தும் பழக்கம் உடையவர்களிடம் பரிசோதனை செய்கின்றனர்.கடந்தாண்டு மே மாதம், சித்தாமூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சியது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விசாரணை
தேவன் கைதானதை தொடர்ந்து, மழுவங்கரணை கிராமத்திற்கு சென்ற கலெக்டர் அருண்ராஜ், காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின், மாவட்டம் முழுதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.அதேபோல, காவல் துறையினரும் அனைத்து பகுதிகளிலும் ரோந்து மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, மாவட்ட காவல் நிர்வாகத்துக்கு அறிக்கை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.