உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஆஜராவதை தடுக்க சங்கங்களுக்கு அதிகாரம் இல்லை

வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஆஜராவதை தடுக்க சங்கங்களுக்கு அதிகாரம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராவதை தடுக்க, வழக்கறிஞர் சங்கங்களுக்கு அதிகாரம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தாம்பரம் பார் அசோசியேஷன் எடுத்த முடிவுக்கு முரணாக, வழக்கறிஞர் வி.செந்தில் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.இதையடுத்து, பார் அசோசியேஷனில் இருந்து, வழக்கறிஞர் செந்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த மாதம் 11ல் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஸ்பெண்ட்

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, “பார் அசோசியேஷன் எடுத்த முடிவை மீறி, நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றதால், வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது,” என்றார்.தாம்பரம் பார் அசோசியேஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.சாந்தசீலன், “சங்க உறுப்பினர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதால், கட்டாய சூழ்நிலையில் தான் பார் அசோசியேஷன் அந்த முடிவை எடுத்தது. அதனால், மனுவை நிராகரிக்க வேண்டும்,” என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.வழக்கறிஞர்கள் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட முடியாது என்றும், அதனால் வழக்காடிகள் மற்றும் நீதி பரிபாலன முறை பாதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.தாம்பரம் பார் அசோசியேஷன் சார்பில், நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் பங்கேற்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு முரணாக மனுதாரர் செயல்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றார் என்பது தான் குற்றச்சாட்டு.நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்ற வழக்கறிஞர்களை, பார் அசோசி யேஷன் தடுக்கவில்லை எனவும், அதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

அடிப்படை உரிமை

எதுவாக இருந்தாலும், நீதிமன்றங்களில் வழக்கறிஞர் ஆஜராவதை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ, பார் அசோசியேஷனுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்வது அடிப்படை உரிமை.அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் உரிமையை, வழக்கறிஞர்கள் சட்டம் வழங்கி உள்ளது. பார் அசோசியேஷனில் இருந்து ஒரு உறுப்பினரை சஸ்பெண்ட் செய்வதன் வாயிலாக, அந்த உரிமையை பறிக்க முடியாது.வழக்கறிஞர்களும், பார் அசோசியேஷனில் உறுப்பினர்களாக இருக்கும் சக வழக்கறிஞர்கள் உடன் சுமுக உறவை பேண வேண்டும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.எனவே, தாம்பரம் பார் அசோசியேஷன் பிறப்பித்த உத்தரவு தேவையற்றது; ரத்து செய்யப்படுகிறது. இது போன்ற முயற்சிகளை பார் அசோசியேஷன் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழ்வேள்
ஆக 17, 2024 09:44

பார் கவுன்சில் என்பது ஒரு யூனியன் மட்டுமே.. கோர்ட் நடவடிக்கைகளில் தலையிட முடியாது...... அனைத்து விதமான யூனியன்களையும் அலுவலகம் தொழிலகம் பகுதிகளில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும்.....அருகே இருந்தால் இம்சை செய்து கொண்டே திரிவார்கள்..


Kasimani Baskaran
ஆக 17, 2024 08:25

இதில் ஒரு வக்கீலாவது நேர்மையாக பொய் சொல்லாமல் வாதாடுவோம் என்று மார் தட்டி சொல்ல முடியுமா? கூட்டமாக சேர்ந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் இவர்களின் கோட்பாடு.


gmm
ஆக 17, 2024 08:22

சங்க விதி மீறும்போது உறுப்பினர் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வேண்டும்.சங்க எல்லைக்குள் இந்த நடவடிக்கை பொருந்தும். அடிப்படை உரிமைக்கு பொருந்தாது. அப்படி என்றால், சங்கம் தேவையில்லை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ