தங்கம் கடத்திய இருவர் மீது காபிபோசோ வழக்கு பதிவு
சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 167 கோடி ரூபாய் மதிப்புள்ள, 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது, 'காபிபோசோ' வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த 60 நாட்களில், 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடை அமைத்து தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 'யுடியூபர்' சபீர் அலி,31, இலங்கையைச் சேர்ந்த கடத்தல் பயணி, கடை ஊழியர்கள் என, ஒன்பது பேரை, ஜூன் இறுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.கடத்தல் தங்கம் எப்படி கைமாறியது என, கைதானவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டு, கடத்தல் தங்கத்தை வெளியே கொண்டு சென்றது தெரிந்துள்ளது.அவரை, தேடி வருகின்றனர். இந்நிலையில், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சபீர் அலி, இலங்கை கடத்தல் பயணி, இருவர் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு, 'காபிபோசோ' வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பரிசு பொருள் கடையில் வேலை செய்த ஏழு பேரையும், நிபந்தனை ஜாமினில் விடுவித்துள்ளனர்.