பிஎச்.டி., தேர்வு முறைகேடு விசாரணை கோரி வழக்கு
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.மதுரை வழக்கறிஞர் கலைச்செல்வன் தாக்கல் செய்த பொதுநல மனு:பிஎச்.டி., (ஆராய்ச்சி) மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை மதுரை காமராஜ் பல்கலை 2024 ஜூலை 8 ல் வெளியிட்டது. செப்.,22 ல் நடந்த தேர்வில் 1094 மாணவர்கள் பங்கேற்றனர். சில மாணவர்களை தேர்ச்சியடைய செய்வதற்காக கருணை மதிப்பெண் வழங்க ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மொத்தம் ரூ.1.5 கோடியை பல்கலையின் சில அலுவலர்கள் லஞ்சமாக பெற்றனர். அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர். மற்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.பல்கலை அமைத்த விசாரணைக்குழு முறையாக விசாரிக்கவில்லை. சிறப்பு விசாரணைக்குழு அமைத்து அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்க டி.ஜி.பி., லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.