| ADDED : ஜூன் 25, 2024 10:40 PM
மதுரை : திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆறு மாசு படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தர, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.விக்கிரமசிங்கபுரம் அனைத்து சமுதாய பேரவை தலைவர் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீராதாரமான தாமிரபரணியை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். திதி, தர்ப்பணம் மற்றும் மதம் சார்ந்த சடங்குகளுக்கு பாபநாசத்தில் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும்.அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை தாமிரபரணியில் மதம் சார்ந்த சடங்குகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும். இக்குழு ஆய்வு செய்து மாசுபடாமல் தாமிபரணியை பாதுகாக்க பரிந்துரைகளை இந்த நீதிமன்றத்தில், ஜூலை 15ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.அதுபோல, பனை மரங்களிலிருந்து கள் இறக்க, விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.