கருணாநிதி காலத்தில் கேட்ட கருணைத்தொகை அவரது மகன் முதல்வராகியும் கொடுக்கவில்லை மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வூதியர்கள் விரக்தி
மதுரை:'மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில், கருணைத்தொகை அறிவித்த போதே, மாதம், 10,000 ரூபாய் தர வேண்டுமென வைத்த கோரிக்கையை, தற்போது அவரது மகன் ஸ்டாலின் முதல்வராகியும் நிறைவேற்றவில்லை' என, மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வூதிய பணியாளர்கள் விரக்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வூதியர்கள் சங்க இணைச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கருணை ஓய்வூதியம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கினார். அப்போது மாதம், 2,500 ரூபாய் கருணைத்தொகையை, அந்தந்த மாவட்ட மத்திய வங்கிகளில் இருந்து வழங்க வேண்டும் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அப்போதே மாதம், 10,000 ரூபாய் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பின், 2014 டிசம்பர் முதல் 3,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.தற்போது மாதம், 5,500 ரூபாய் பெறுகிறோம். இந்த தொகைக்குள் வீட்டுச்செலவு, மருத்துவச் செலவுகளை அடக்க முடியாமல் பரிதவிக்கிறோம். ஓய்வூதியர்கள் இறந்தால், அவரது வாரிசாக கணவன் அல்லது மனைவிக்கு பாதித்தொகை, 2,750 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், எப்படி குடும்பத்தை நடத்த முடியும்?ஓய்வூதியர் சங்கத்தில் தமிழகம் முழுதும், 4,400 பேரும், மதுரை மாவட்டத்தில், 450 பேரும் உள்ளனர். தற்சமயம் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்குகின்றன. பெரும்பாலான வங்கிகள் வரி செலுத்தும் உயர்ந்த நிலையில் உள்ளன. லாபத்தில் குறிப்பிட்ட சதவீத தொகையை, 'கார்பஸ்' நிதி என்ற பெயரில் ஒதுக்குகின்றன. எங்களுக்கான கருணை ஓய்வூதியத தொகையை உயர்த்துவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. வங்கிகள் அதன் லாபத்தில் தான், இத்தொகையை தர வேண்டியிருக்கும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை. அதனால் தான் கருணைத்தொகை தரப்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் வைத்த கோரிக்கையான மாதம், 10,000 ரூபாய் கருணைத்தொகை, இறந்தால் வாரிசுக்கு, 5,000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.