| ADDED : ஜூன் 18, 2024 06:13 AM
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் அருகே கோவிலுக்கு வந்த போது தவறி ஆற்றில் விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சென்னை தொழிலாளிக்கு, கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே பாரதப்புழா ஆற்றின் கரையோரம் நாவா முகுந்த கோவிலும், மறுகரையில், பிரம்மா மற்றும் சிவன் கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கோவிலுக்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருவர்.இந்நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மே 1ம் தேதி சென்னையை சேர்ந்த தையல் தொழிலாளி சசிகுமார் வந்தார். அவர், ஆற்றில் குளிக்க இறங்கிய போது, கால் தவறி விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்தது. அவரை மீட்ட கோவில் ஊழியர்கள், திரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.சென்னையில் இருந்து அவரது சகோதரரும், உறவினர்களும் உடனடியாக வர முடியவில்லை. இதனால், கோவில் நிர்வாகத்திடம் கோவில் ஊழியர்கள் இத்தகவலை தெரிவித்தனர்.அறுவை சிகிச்சை செலவை, கோவில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. கோவில் ஊழியர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர்.தொடர் சிகிச்சையின் போது, அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால், திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, கோவில் ஊழியர்கள் பராமரித்தனர். சிகிச்சை முடிந்து அவர் கடந்த, 15ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.