சூதாட்டத்தில் ஈடுபட ரீல்ஸ் வெளியீடு; 6 பேர் மீது ஆணையம் வழக்கு பதிவு
சென்னை : 'ஆன்லைன்' சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, சமூக வலைதளத்தில், 'ரீல்ஸ்' வெளியிட்ட ஆறு பேர் மீது, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் வழக்குப்பதிவு செய்து உள்ளது.தமிழகத்தில், 'ஆன்லைன்' விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதனை ஊக்கப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நசிமுதீன் தலைமையில், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சென்னையில் செயல்படுகிறது. சமீபத்தில், இவ்வாணையம், 18 வயதுக்கு உட்பட்டோர் பணம் கட்டி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட தடை விதித்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், நள்ளிரவு, 12:00 மணியில் இருந்து அதிகாலை, 5:00 மணி வரை, எந்த நபரும் பணம் கட்டி விளையாட அனுமதிக்கக்கூடாது என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தது. தொடர் நடவடிக்கையாக, ஆணைய அதிகாரிகள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, ரீல்ஸ் வெளியிட்ட தம்பதி உட்பட ஆறு பேர் மீது, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை மற்றும் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும், வாடகை வாகனங்களில், 'ஆன்லைன்' சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையம் எச்சரித்துள்ளது.
தண்டனை என்ன?
'ஆன்லைன்' சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குப்படுத்துதல் சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில், 'ரீல்ஸ்' வெளியிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு, ஓராண்டு சிறை தண்டனை மற்றும், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே குற்றத்தை மீண்டும் செய்வோருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.