உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: கண்காணிக்க ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: கண்காணிக்க ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் அமர்வு' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், “கிரிவலப்பாதை, மலையை ஆக்கிரமித்த நபர்களுக்கு சட்ட விரோதமாக பட்டா வழங்கப்பட்டு உள்ளது. எனவே, அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில், நில நிர்வாக ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., அறநிலையத் துறை இணை ஆணையர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, பட்டாக்களை ரத்து செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, இப்பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
செப் 15, 2024 21:56

ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவேண்டும். கிரிவலப்பாதை தினம் தினம் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக பவுர்ணமி தினம் முடிந்த மறுநாள் கிரிவலப் பாதை மற்றும் கோவில் அருகாமையில் உள்ள தெருக்கள் ஒரே குப்பைக்கூளம். வீதிகளில் நடக்கவே முடியாது. அந்த அளவுக்கு அசுத்தம், துர்நாற்றம். திருவண்ணாமலை கோவிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் தினம் தினம் வருகிறார்கள். கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஊர் சுத்தமாக இல்லாவிட்டால் எப்படி?


அப்பாவி
செப் 15, 2024 18:44

ஓய்வு நீதிபதிகள் காட்டில் மழை. நல்ல வேலை கிடைச்சு நாலு வருஷம் ஓட்டலாம்.


sridhar
செப் 15, 2024 07:26

மாநில அரசு பொறுப்பில் விட்டிருந்தால் முன்னாள் நீதிபதி சந்துருவை நியமித்திருப்பார் , அவர் கோவில் அங்கே இருப்பதால் தான் ஆக்கிரமிப்பு நடக்கிறது , கோவிலை மூடிவிடவேண்டும் என்று ஒரே நாளில் தீர்வு சொல்லியிருப்பார் .


Kasimani Baskaran
செப் 15, 2024 06:35

பசையான இந்துக்கோவில்களை மட்டும் ஆக்கிரமித்திருக்கும் கூட்டத்தை அகற்றினாலேயே கூட பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை