உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் - 2 தேர்வு வினாக்கள் கடினமாக இருந்ததாக கவலை

5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் - 2 தேர்வு வினாக்கள் கடினமாக இருந்ததாக கவலை

சென்னை:தமிழகம் முழுதும், 2,327 அரசு பணியிடங்களை நிரப்ப, நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வை, 5.81 லட்சம் பேர் எழுதினர்.ஒருங்கிணைந்த குரூப்- 2 பணிகளில் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடந்தது. தேர்வுக்கு, 7 லட்சத்து 93,966 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று, 2,763 மையங்களில், 5 லட்சத்து 81,305 பேர் தேர்வு எழுதினர். இது, விண்ணப்பித்தவர்களில், 73.22 சதவீதம்.டி.என்.பி.எஸ்.சி., தலைவர் எஸ்.கே.பிரபாகர், சென்னை எழும்பூர் பிரசிடென்சி மேல்நிலை பள்ளி மையத்தில், தேர்வு நடப்பதை பார்வையிட்டார்.

பல்வேறு பதவிகள்

அவர் அளித்த பேட்டி:துணை வணிக வரித்துறை அதிகாரி, சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 2,327 பேரை தேர்வு செய்ய தேர்வு நடந்துள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோர், முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு, 10 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு, எட்டு தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மீதமுள்ள இரண்டு தேர்வுகளும் நடத்தப்படும்.இந்த ஆண்டு இதுவரை, 10,315 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10,872 பேருக்கு வேலை கிடைக்கும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுக்கான விடைத்தாள், ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும். தேர்வர்கள் மாற்று கருத்து இருந்தால் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

இன்டர்வியூ கிடையாது

அதை வல்லுனர் குழு ஆய்வு செய்து, இறுதி முடிவு வெளியிடப்பட்டு தேர்வுத்தாள் திருத்தும் பணி துவக்கப்படும். இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். குரூப் - 4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கவர்னர் பதவி சர்ச்சை கேள்வி

நேற்று நடந்த குரூப் - 2 தேர்வில், வினாக்கள் கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தேர்வில் கவர்னர் குறித்த வினா, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இக்கேள்வி, 'கூற்று, காரணம்' வடிவில் இடம் பெற்றிருந்தது. கூற்று பகுதியில், 'இந்திய கூட்டாட்சியில், மாநில அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என, இரு வகையான பணிகளை செய்கிறார்' என்று குறிப்பிட்டு, காரணம் பகுதியில், 'கவர்னர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது' என, கொடுக்கப்பட்டிருந்தது. இக்கேள்விக்கு பதிலாக, 'கூற்று சரி, ஆனால், காரணம் தவறு; கூற்று மற்றும் காரணம் சரி; கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது; கூற்று தவறு, காரணம் சரி; கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை; விடை தெரியவில்லை' என, ஐந்து பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதில், சரியான விடையை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும்.கவர்னர் கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கவர்னர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய கேள்வி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் இடம் பெற்றிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை