சென்னை:'செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின் வாங்க போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் எனக்கில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக, மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. கொலை முயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்த வழக்கு, வெடிபொருட்கள் வழக்கு, கொலை வழக்கு என, பல வழக்குகள் போன்றவை சமூகத்தின் மோசமான குற்ற வழக்குகள் தான். இப்படிப்பட்ட வழக்குகள் அவர் மீது உண்டு. குறிப்பாக, அவர் மீது மூன்று கொலை மிரட்டல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.குண்டர் சட்டத்தில் வழக்கில் கைதானதை இல்லை என்கிறாரா; இவரை வாழும் மகாத்மா என்று அழைக்க விரும்புகிறாரா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தன் கொள்கைக்கு நேர் எதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால், செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின் வாங்க போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. அவர், எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயார்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.