சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் சென்னையின் இரண்டாவது விமான நிலைய கட்டுமான பணிகளை, 2026 ஜனவரியில் துவக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வரும் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, அதிக விமானங்கள் வந்து செல்ல வசதியாக, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக தமிழக அரசின் டிட்கோ செயல்படுகிறது.விமான நிலையம் அமைப்பதற்காக, பரந்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,321 ஏக்கர் நிலம் தேவை. தற்போது, வருவாய் துறை வாயிலாக நிலம் எடுப்பு பணி முழுவீச்சில் நடக்கிறது. விமான நிலைய திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதவிர, பல துறைகளின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. பரந்துார் விமான நிலைய திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. மொத்த திட்ட செலவு 29,150 கோடி ரூபாய். அதன்படி, முதற்கட்டத்தில், 2029 முதல், ஆண்டுக்கு இரண்டு கோடி பயணியரை கையாள திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, முதற்கட்டகட்டுமான பணிகளை, 2026 ஜனவரியில் துவக்கி, 2028 டிசம்பரில் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இரண்டாம் கட்டமாக, 2036ல் கூடுதலாக மூன்று கோடி பயணியரை கையாளவும், அதற்கான பணிகளை 2033 ஜனவரியில் துவக்கி, 2035 டிசம்பரில் முடிக்கப்பட உள்ளது. மூன்றாம் கட்டம், 2041 - 42; இறுதி கட்ட பணிகளை, 2044 - 46ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணி முடிந்ததும், 2047ல் பரந்துார் விமான நிலையம் ஆண்டுக்கு, 10 கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக இருக்கும்.