உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடக்கம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி

எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடக்கம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி

சென்னை: கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, 'எம் சாண்ட்' விலையை, குவாரி உரிமையாளர்கள் அடாவடியாக உயர்த்தி உள்ளதால், தமிழகம் முழுதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.தற்போதைய நிலவரப்படி, 3,000க்கும் மேற்பட்ட இடங்களில், கருங்கல் குவாரிகள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. இதை சார்ந்து, அரசு அனுமதியுடன், 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.தமிழகத்தில் நடக்கும் கட்டுமான பணிகளின் மொத்த தேவையில், 60 சதவீத அளவுக்கு தான் இங்குள்ள ஆலைகளால் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.எம் சாண்டுக்கு சந்தையில் நிலவும் பற்றாக்குறையை பயன்படுத்தி, கல் உடைக்கும் கிரஷர்களை நடத்தும் சிலர், கருங்கல் துகள்களை முறையாக சுத்தப்படுத்தாமல், எம் சாண்ட் என்று கூறி விற்கின்றனர்.கடந்த ஜனவரி மாத இறுதியில், கரூர், திருச்சி, சிவகங்கை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், எம் சாண்ட் விலையை உயர்த்தி, குவாரி உரிமையாளர் சங்கங்கள்அறிவித்தன.அப்போதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்ததால், இந்த விலை உயர்வு, தற்போது தமிழகம் முழுதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், கட்டுமான பணிகளை தொடர முடியாத அளவுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

விலை உயர்வு

கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:பொதுவாக, கோடை காலம் துவங்கும் போது, கட்டுமான பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த சமயத்தில், எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவையும் கூடும். இதை கருத்தில் வைத்து, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச விலை உயர்வு இருக்கும்.தற்போது, எந்த அடிப்படை காரணமும் இன்றி, எம் சாண்ட், பி சாண்ட், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் விலை வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர்களின் இந்த அடாவடி போக்கை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கின்றனர்.கட்டுமான பணிக்கான எம் சாண்ட், 100 கன அடி உடைய ஒரு யூனிட் விலை, 3,500 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. பூச்சு வேலைக்கு பயன்படுத்தப்படும் பி சாண்ட், ஒரு யூனிட், 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.கருங்கல் ஜல்லிகள் விலை யூனிட், 3,000 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், நான்கு யூனிட் அடங்கிய ஒரு லோடு எம் சாண்ட் வாங்க, 4,000 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கடத்தல் மட்டும் குறையவில்லை!

தமிழகத்துக்கு தேவைப்படும் மொத்த எம் சாண்ட் அளவை, முறையாக அனுமதிக்கப்பட்ட ஆலைகளால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு தினமும், 1,000 லாரிகளில் எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.அனுமதி பெறப்பட்ட குவாரிகளில் இருந்து கருங்கற்கள், ஆலைகளில் இருந்து எம் சாண்ட் எடுத்து செல்லும் லாரிகள், கனிம வளத்துறையிடம் இருந்து நடைச்சீட்டு பெற்று செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான லாரிகள், இத்தகைய நடைச்சீட்டு பெறாமல் எடுத்து செல்கின்றன.கனிம வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ளும் போது சிக்கும் லாரிகள் மட்டும் பறிமுதல் செய்யப்படுகின்றன. முறையான நடைச்சீட்டு இல்லாத லாரிகள் நடமாட்டம் காரணமாக, தினமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எம் சாண்ட் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.

மவுனம் சாதிப்பதால் சந்தேகம்!

இந்திய கட்டுமான வல்லுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால், வீடு கட்டுவோருக்கு எதிர்பாராத வகையில், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசின் பல்வேறு திட்டங்களுக்காக டெண்டர் எடுத்தவர்களும், கட்டுமான பணிகளை அதே மதிப்பில், தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்த மதிப்புகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளில், அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். கட்டுமான பொருட்கள் விலையில், இதுபோன்ற அசாதாரண சூழலை கட்டுப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் மவுனமாக இருப்பது, பல்வேறுசந்தேகங்களை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram Moorthy
மார் 02, 2025 02:30

ஐம்பது ரூபாய்க்கு விற்க்க வேண்டிய பெட்ரோல் டீசல் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்ய படுகிறது இன்னும் நிறைய பொருட்கள் பல நூறு ரூபாய் செலவில் விற்பனை ஆகிறது இருநூறு முன்னூறு ரூபாய்க்கு விற்க்க வேண்டிய சிமெண்ட் ஐநூறு அறுநூறு .ரூபாய்க்கு விற்க்க படுகிறது அது போதாது என்று எம் சாண்ட் விலை ஏறி விட்டது என்று அவுத்து விடுகிறார்கள் மக்கள் நிலை வர வர மோசமாகி விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை