| ADDED : ஏப் 06, 2024 01:26 AM
சென்னை:கோவை ஸ்ரீ சாய் விவாக மஹாலில் 'புரபஷனல் இன் பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் இன்று புத்தக வெளியீட்டு விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. உள்ளரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, செஸ் பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட துணை தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீ தர்மராகவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி ''புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.போலீசார் சார்பில் அரசு வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, ''தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்வதாக இருந்தால் போலீசின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'உள்ளரங்கில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிக்கு, சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல்துறை, அரசு எதற்கு? தொடர்ந்து இதுபோல சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டினால், அரசியல் சட்ட முடக்கம் என்று உத்தரவில் குறிப்பிட வேண்டியது வரும்' என்றார்.பின் நீதிபதி இன்று மதியம் 1:30 மணிக்குள் அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, புதிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.