| ADDED : ஆக 22, 2024 07:34 PM
சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முதல் சாட்சியான வங்கி மேலாளரிடம், செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை துவங்கியது.இவ்வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு பின், இம்மாதம் 8ல் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்கியது.இந்த வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்ட கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் அப்போதைய மேலாளர் ஹரிஷ்குமார், நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மா.கவுதமன் ஆஜராகி, வங்கி மேலாளர் ஹரிஷ்குமாரிடம் குறுக்கு விசாரணை செய்தார். செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் சகோதரர் அசோக்குமாரின் வங்கி கணக்குகள், ஆவணங்கள் மற்றும் கடிதம் தொடர்பான பல்வேறு கேள்விகள், குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டன. அதற்கு ஹரிஷ்குமார் பதிலளித்தார். குறுக்கு விசாரணை நிறைவு பெறாததால், வரும் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.அதுவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும், 56வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார்.