| ADDED : மார் 28, 2024 01:41 AM
தேனி:''சென்னை ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதில் முக்கியமானவர் தங்கதமிழ்செல்வன். அதற்காக அவரை நான் கண்டித்தேன் ''என தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்த பின் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் கூறினர்.அவர் கூறியதாவது: கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டனர். இதற்கு ஆளுங்கட்சியின் அழுத்தம் இருந்திருக்கலாம். வேனில் இருந்த சிலரை இறக்கிய பின் அனுமதித்தனர். சென்னை ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பினர் ஓட்டுக்கு ரூ.10ஆயிரம் கொடுத்ததால், அப்போது எங்களிடம் இருந்த 18 எம்.எல்.ஏ.,க்களில் சிலர் கோபமடைந்து 30, 40 பூத்களுக்கு டோக்கன் கொடுத்தனர். அது டோக்கனா, பேப்பரா, 20 ரூபாயா என எனக்கு தெரியாது. அதில் தற்போதைய தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் முக்கியமானவர்.இச்செயலுக்காக அவரை அலைபேசியில் கண்டித்தேன். தற்போது தோல்வி பயத்தில் உளறுபவர்களுக்கு, விரக்தியில் பேசுபவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை. பன்னீர்செல்வத்துடன் ஆலோசித்து ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வேன். நாங்கள் இணைந்ததே ஜெயலலிதா இயக்கத்தை மீட்டு தொண்டர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கே ஆகும். தற்போது இரட்டை இலையை எதிர்த்து வெற்றி பெற்று தான் அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியும் என்றார்