உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்த டி.ஐ.ஜி., மாற்றம்

சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்த டி.ஐ.ஜி., மாற்றம்

சென்னை:கைதியை வீட்டு வேலை செய்யச்சொல்லி சித்ரவதை செய்த வழக்கில் சிக்கிய, வேலுார் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 30; கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை, வேலுார் சரக டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, தன் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிவகுமார், 4.25 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி விட்டதாக, 14 நாட்கள் தனிச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதற்கு சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், காவலர் சரஸ்வதி உள்ளிட்ட, 13 பேர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ராஜலட்சுமி, அப்துல் ரஹ்மான் உட்பட, 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைதி சிவகுமார், சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரிடமும் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.இந்நிலையில், டி.ஐ.ஜி., ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை, சென்னை சரக டி.ஐ.ஜி., முருகேசன் கவனிப்பார் என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் நேற்று அறிவித்துள்ளார்.வேலுார் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ