முதலீடுகள் குவிவதாக தி.மு.க., பொய் பிரசாரம்
சென்னை:தமிழகத்தில் முதலீடுகள் குவிவதாக, தி.மு.க., அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 2024- - 25 ஜூனுடன் முடிந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், 8325 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழகம், ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனை, தமிழகம் இழந்து வருவதையே இது காட்டுகிறது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாநிலத்தின் தொழில் முதலீடு அதிகரித்து விட்டது போன்ற பொய்யான பிம்பத்தை, தி.மு.க., அரசு ஏற்படுத்த முயல்கிறது. ஆனால், கடந்த 39 மாதங்களில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு வெறும், 68,145 கோடி ரூபாய் மட்டுமே.வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து வருவதாக பொய் பிரசாரம் செய்யாமல், உண்மையிலேயே முதலீடுகளை ஈர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும். இதுவரை தமிழகத்திற்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மையான நிலை என்ன என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.