அறுவடைக்கு அன்பளிப்பாக குக்கர், தவா முழுவீச்சில் களமிறங்கியது தி.மு.க.,
சென்னை:வரும் சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, 500 ஓட்டுக்கள் கட்டாயம் வாங்குவதை உறுதி செய்ய, பெண்களுக்கு, 'குக்கர், தவா' உள்ளிட்ட பரிசுகளை தொடர்ந்து வழங்குமாறு, கட்சியினருக்கு தி.மு.க., நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:வரும், 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை முழுவீச்சில் துவங்கியுள்ளது. தமிழகம் முழுதும், 234 சட்டசபை தொகுதிகளிலும், 68,000 ஓட்டுச்சாவடிகள் எனும் பூத்கள் உள்ளன. தொகுதிக்கு சராசரியாக, 290 - 300 பூத்கள் உள்ளன. ஒரு பூத்திற்கு, 750 - 1,500 வாக்காளர்கள் உள்ளனர். சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத்திலும் கட்சிக்கு, 500 ஓட்டுக்கள் கட்டாயம் கிடைத்தால், 1.50 லட்சம் ஓட்டுக்கள் உறுதியாக கிடைக்கும். இன்னும் கூடுதலாக, 20,000 ஓட்டுக்கள் வாங்கி விட்டால் வெற்றி பெற்று விடலாம்.பெண்கள் ஓட்டுக்களை மாற்றி போட மாட்டார்கள். எனவே, இந்த கணக்கை மனதில் வைத்து, சட்டசபை தேர்தல் வரும் வரை, ஒவ்வொரு பூத்திலும், 500 வாக்காளர்களுக்கு, 'குக்கர், தவா, ஹாட்பாக்ஸ்' என, சமையலுக்கு பயன்படும் பொருட்களை பரிசாக தொடர்ந்து வழங்குமாறு, கட்சினரை, மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அமைச்சர் உதயநிதி தொகுதியான, சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று, 1,000க்கும் மேற்பட்டோருக்கு பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. வரும், 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள், ஜூன் 3ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில், பூத் வாரியாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.