பொத்தாம் பொதுவாக புகார் சொல்வதா? அமலாக்கத் துறைக்கு அமைச்சர் கண்டனம்
சென்னை:''பொத்தாம் பொதுவாக டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை, சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.அவர் அளித்த பேட்டி:அமலாக்கத்துறை அதிகாரிகள், 'டாஸ்மாக்' நிறுவனத்தில் நடத்திய சோதனையில், பொத்தாம் பொதுவாக, 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக அறிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த வழக்கு விபரங்கள் என்ன, எந்த ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன என்ற விபரத்தை, அவர்கள் அறிவிக்கவில்லை.டாஸ்மாக் கடைநிலை ஊழியர்கள் ஏதேனும் தவறு செய்து இருந்தால், அவர்கள் மீது மாநில அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கும். கடைநிலை ஊழியர் தவறு செய்தார் என்பதற்காக, டாஸ்மாக் நிறுவனம் முழுதிலும் முறைகேடு நடந்துள்ளதாக கூற முடியுமா?தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் என கூறுகின்றனரா?தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முதல் நாளில் டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறுகிறார். அதற்கு அடுத்த நாளே, அமலாக்கத்துறை அதிகாரிகளும், அதே கருத்தை அறிக்கையாக வெளியிடுகின்றனர். என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மக்கள் தெள்ளத்தெளிவாக அறிவர். 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு, அவர்களின் குடும்பச் சூழல், மருத்துவ காரணங்களால் இடமாற்றம் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடந்துள்ளது போல அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர். 'டிரான்ஸ்போர்ட் டெண்டர்' வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது. ஆனால், அதிலும் முறைகேடு நடந்து இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும், பாட்டில் நிறுவனங்களுக்கும் நடந்த வரவு, செலவு கணக்கை, எங்கள் நிறுவனத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தி, கூடுதல் கொள்முதல் ஆணைகள் பெறப்பட்டதாக கூறியுள்ளனர்.நான்கு ஆண்டுகளாக, மதுக்கூடத்திற்கான உரிமம் வழங்கும் பணி, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கிறது. கிடங்குகளில் இருந்து சில்லறை கடைகளுக்கு மதுபானங்கள் வினியோகம் செய்யும் நடைமுறை, 24 மாவட்டங்களில் கணினியமாக்கப்பட்டு உள்ளது. இதை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள், எவ்வித முகாந்திரமும் இல்லாமல், பொத்தாம் பொதுவாக, 'டாஸ்மாக்'கில், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ளனர். எனவே , அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை மற்றும் அறிவிப்பை, சட்டரீதியாக எதிர்கொள்வோம். கடைசி மூன்று மாதங்களில் விற்பனையான மதுபான வகைகளை கணக்கிட்டும், அதிலும் கடைசி மாதம் அதிகளவில் விற்பனையான மதுபானங்களை கொள்முதல் செய்து வருகிறோம். இதில் எந்த நிறுவனங்களுக்கும் சலுகைகள் காட்டப்படுவது இல்லை.தமிழகத்தில், மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் கடைகோடி மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்துள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு, அமலாக்கத்துறை அதிகாரிகளை ஏவி, சோதனையை நடத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.