சென்னை: மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை எனில், சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு, மின் வாரியம் இழப்பீடு தர வேண்டும். இதுதொடர்பாக பலருக்கு தெரியாததால், நுகர்வோர் கேட்காமலேயே இழப்பீடு வழங்கும் வசதியை ஏற்படுத்த, கடந்த பிப்ரவரி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதுவரை, அதை செயல்படுத்தாமல் மின் வாரியம் அலட்சியமாக உள்ளது. காலக்கெடு
புதிய மின் இணைப்பு, குறைபாடு உடைய மீட்டரை மாற்றுவது, மின் கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட, மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து தரும் வகையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு மேலாகியும் செய்து தரவில்லை எனில், மின் வாரியம் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி இழப்பீட்டை நுகர்வோருக்கு தர வேண்டும். அதன்படி, தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும், 200 ரூபாய் என, அதிகபட்சம், 2,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும். இது, ஒவ்வொரு சேவைக்கும் மாறுபடும். இழப்பீட்டை பெறும் நடைமுறை பலருக்கு தெரிவதில்லை. எனவே, தாமத சேவைகளால் பாதிக்கப்படும் நுகர்வோர் கேட்காமலேயே, தானாகவே இழப்பீடு வழங்கும் வகையில், இணையதள விண்ணப்பங்களில் மென்பொருள் வசதிகளை அமல்படுத்துமாறு, மின் வாரியத்திற்கு, 2024ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.இதற்கு அந்தாண்டு ஆகஸ்ட் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், மின் வாரிய கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு பிப்., வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவகாசம் கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இதுவரை தானாகவே இழப்பீடு வழங்கும் வசதி நடைமுறைக்கு வரவில்லை. புதிய தலைவர்
இதுகுறித்து, மின் நுகர்வோர்கள் கூறியதாவது:
மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, எந்த தேதி, நேரத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது, கட்டணம் செலுத்தப்பட்டது என, அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவாகின்றன. அப்படி இருந்தும் சேவைகளை சரியான நேரத்திற்குள் செய்து தருவதில்லை. இதை தவிர்க்கவே, தானாகவே இழப்பீடு தரும் வசதி துவக்க ஆணையம் அறிவுறுத்தியது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், இந்த சேவையை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.