உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்; எதிர்த்த வழக்கில் விசாரணை முடித்துவைப்பு

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்; எதிர்த்த வழக்கில் விசாரணை முடித்துவைப்பு

சென்னை : சட்டவிரோத மணல் விற்பனை விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்த வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், புகார் எழுந்தது. இதுகுறித்து, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, 'சம்மன்' அனுப்பியது.இதை எதிர்த்து, பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலுார் மற்றும் வேலுார் மாவட்ட கலெக்டர்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு, வழக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர். விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன், கலெக்டர்கள் ஆஜராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்மனை எதிர்த்த கலெக்டர்களின் வழக்கு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.இதற்கிடையில், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையின் அதிகாரவரம்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களும் வாபஸ் பெறப்பட்டதால், அவற்றை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை