| ADDED : பிப் 23, 2025 05:43 AM
விழுப்புரம் : 'மக்களைப் பற்றி சிந்திக்காத தி.மு.க., ஆட்சி துாக்கியெறியப்பட வேண்டும்' என மாஜி அமைச்சர் சண்முகம் பேசினார்.விழுப்புரத்தில் அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:எதையும் எதிர்பாராமல் மக்களுக்காக செய்வது தான் அ.தி.மு.க., தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு கூட அவங்களுக்கு வேண்டியதை எதிர்பார்த்து தான் செய்கின்றனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளை கடந்தாலும், விலைவாசி மற்றும் மின்கட்டணம் உள்ளிட்ட எந்த உயர்வையும் கட்டுப்படுத்தவில்லை. கேட்டால், ஆயிரம் ரூபாய் தந்து விட்டேன் என்கிறார்.அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினோம். இந்த ஆட்சியில் ஒன்றுகூட வழங்கவில்லை. அ.தி.மு.க., திட்டங்களை முடக்கியது தான் இந்த ஆட்சியாளர்களின் சாதனை.தி.மு.க., ஆட்சியில் விழுப்புரம் நகரில் ஒரு வளர்ச்சி பணி கூட நடக்கவில்லை. தொகுதி எம்.எல்.ஏ., எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல், முதல்வரை 'அப்பா' என அழையுங்கள் என்கிறார்.அ.தி.மு.க., மட்டுமே ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம். மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க., அரசின் சாதனை கஞ்சா தான். தற்போது, தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது. குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் தி.மு.க., ஆட்சி துாக்கியெறியப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.