திருநெல்வேலி : திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு போட்டியாக அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ராமசுப்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று அவர், வேட்புமனுவை வாபஸ் பெறப் போவதாகவும், ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத் தாக்கல் செய்தேன் எனக்கூறியுள்ளார்.திருநெல்வேலி எம்.பி.,யாக தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானதிரவியம் உள்ளார். லோக்சபா தேர்தலில் இத்தொகுதி காங்.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசாரிடையே சீட் பெறுவதில் கோஷ்டி குழப்பம் நிலவியது. முன்னாள் எம்.பி., ராமசுப்பு, நிர்வாகி பால்ராஜ், வழக்கறிஞர் காமராஜ், நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மகன் அசோக் உள்ளிட்டார் சீட் கேட்டனர். கடைசி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.நேற்று காலை 11:00 மணிக்கு அவர் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி பெறப்பட்டது. தி.மு.க.,வின் இரு கோஷ்டி நிர்வாகிகளின் அலுவலகங்கள், காங்., அலுவலகங்களுக்கு சென்று நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து விட்டு மதியம் 2:00 மணிக்கு தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் வேட்பு மனு செய்தார்.இதற்கிடையில் அவருக்கு போட்டியாக காங்., மாநில பொது செயலாளர் வானமாமலை, முன்னாள் எம்.பி.,ராமசுப்பு ஆகியோர் மனுதாக்கல் செய்ய படிவம் பெற்றனர். இதில் ராமசுப்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். வானமாமலை தாமதமாக வந்ததால் அவரது வேட்பு மனு பெறப்படவில்லை.காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கூறுகையில் ''திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகளான நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா, பாபநாசம் -மணிமுத்தாறு அணைகள் இணைப்பு, குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம், திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் குறித்து கேட்டதற்கு 'அதுகுறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்றார்இந்நிலையில், ராமசுப்பு இன்று அளித்த பேட்டி: ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத் தாக்கல் செய்தேன். கட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டேன். நெல்லை தொகுதியில் வேட்புமனுவை வாபஸ்பெற முடிவு செய்துள்ளேன். மனுவை திரும்பப் பெற ஆதரவாளர்களை அலுவலகம் அனுப்பி வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். போராட்டம்
காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்ததை படம், வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலக வாசலில் பத்திரிகையாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார்.