உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருத்தணி அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து நால்வர் பலி; 2 குழந்தைகள் உட்பட 30 பேர் படுகாயம்

திருத்தணி அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து நால்வர் பலி; 2 குழந்தைகள் உட்பட 30 பேர் படுகாயம்

திருத்தணி:திருத்தணி அருகே, டாரஸ் லாரி மோதியதில், அரசு பேருந்தில் பயணம் செய்த, ஒரே கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். இரு குழந்தைகள் உட்பட 30 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் பலருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த மகான்காளிகாபுரத்தில் இருந்துதடம் எண்: 'டி48' அரசு பேருந்து, திருத்தணிக்கு புறப்பட்டது. பாலாபுரத்தைச் சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் ஜெகநாதன், 45, பேருந்தை இயக்கினார். ஆர்.கே.பேட்டை சீனிவாசன், 45, நடத்துநராக சென்றார்.அம்மையார்குப்பம் நிறுத்தத்தில், 35 ஆண்கள், ஐந்து பெண்கள் ஏறினர். கே.ஜி.கண்டிகை பெட்ரோல் பங்க் அருகே பேருந்து சென்றபோது, திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி அசுர வேகத்தில் வந்த டாரஸ் லாரி, அரசு பேருந்தின் மீது மோதியது.இதில், பயணியர் ஒருவர் மேல் ஒருவர் தடுமாறி விழுந்தனர்; ஜன்னல் கம்பி, இருக்கை கம்பிகள் மோதி அடிபட்டனர். பேருந்தும் அப்பளம் போல் சுக்குநுாறாக நொறுங்கியது.இந்த களேபரத்தில் அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த முரளி, 38, மகேஷ், 40, சிவானந்தம், 50, பாண்டுரங்கன், 60, ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.காயமடைந்த பயணியரின் அலறலை கேட்டு, பங்க் ஊழியர்கள் மற்றும்அவ்வழியே சென்றோர்,பேருந்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், இரண்டு பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி, 15 பெண்கள், 13 ஆண்கள், இரு குழந்தைகள் என மொத்தம், 30 பேர் பலத்த காயங்களுடன் தவித்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் லேசான காயம், நடத்துநர் படுகாயம் அடைந்தனர். மீட்கப்பட்டோரில்14 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது;சிலருக்கு கால்கள் துண்டாகின.இதையடுத்து, அவர்கள், நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாயிலாக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பப்பட்டனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர்.மற்றவர்களுக்கு, திருத்தணி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திருத்தணி போலீசாரின்முதற்கட்ட விசாரணையில், டாரஸ் லாரி ஓட்டுநர் பாஸ்கரன் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததும், விபத்து நடந்ததும் அவர் அங்கிருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது.

நேற்று சுட்டிக்காட்டிய 'தினமலர்'

அரசு பேருந்து - டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளான கே.ஜி.கண்டிகை பகுதியில், நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணியிடத்தில் தடுப்பு வேலிகள், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால், விபத்து அபாயம் இருப்பதாக, நம் நாளிதழில் , புகைப்படத்துடன் செய்தி வெளியானது. விபத்து அபாய பகுதியை சுட்டிக்காட்டியும், நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே, இந்த கோர விபத்திற்கு காரணம்.

சமையல் வேலைக்கு சென்றவர்கள் பலி

அம்மையார்குப்பத்தில் வசிப்போரில்பலர் நெசவாளர்கள். விசைத்தறி கூலியை அதிகப்படுத்தி தரக்கோரி, கடந்த 15 நாட்களாக வேலையை நிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக, சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமையல் வேலை செய்து கிடைக்கும் ஊதியத்தில் குடும்பத்தை நடத்துவதற்காக, 'டி48' அரசு பேருந்தில் பயணித்துள்ளனர். இந்த விபத்தால், அவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ரூ.3 லட்சம் நிவாரணம்

விபத்தில் பலியான நான்கு பேர் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். படுகாயமடைந்து சிகிச்சை பெறுவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்; லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, உடனே வழங்கப்படுவதாக, அவர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anbarasu K
மார் 08, 2025 12:55

பாவம் அவங்க அவைவரும் அப்பாவிகள் இவங்க அந்த ஓட்டுனரை குடிக்க வச்சி இந்தமாதிரி பண்ணிட்டானுங்க குடி குடியை கெடுக்கும் அடுத்தவங்க குடும்பத்தையும் சேர்த்து கெடுக்கும்


முக்கிய வீடியோ