ஹோட்டலாக மாறிய சுனாமி குடியிருப்பு அறிக்கை கேட்கிறது பசுமை தீர்ப்பாயம்
சென்னை:புதுச்சேரி அருகே சின்ன முதலியார்சாவடியில், சுனாமி குடியிருப்புகளை தங்கும் விடுதிகளாக மாற்றியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.'புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார்சாவடியில், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.'தற்போது இந்த வீடுகள், தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில், கோபால் என்பவர் மனு தாக்கல் செய்தார்.முதன்மை அமர்வு, இந்த வழக்கை சென்னையில் உள்ள தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுக்கு மாற்றியது.அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:சுனாமியின் போது வீடுகளை இழந்த மீனவர்களுக்காக, 2008ல் கட்டப்பட்ட குடியிருப்புகள், இப்போது தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு, விருந்தினர் மாளிகைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது.'இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 5-ன் படி தண்டனைக்குரியது' என, குடியிருப்பு உரிமையாளர்களுக்கு, 2023 ஜனவரி 6ல் வாரியம் நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின் என்ன நடந்தது, விசாரணை முடிந்து விட்டதா, அபராதம் விதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.எனவே, விசாரணையை விரைவாக முடித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 3ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.