சென்னை:கோடை வெப்பத்தின் அதிகபட்ச தாக்கம் சற்று குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக கே.ஆர்.பி., அணை மற்றும் கீழ்பென்னாத்துார் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்தது. மாநிலம் முழுதும், 25க்கும் மேற்பட்ட இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.இன்று முதல் நாளை மறுதினம் வரை, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், சில இடங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையில் வானம் சிறிது மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இரவு அல்லது அதிகாலையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.வெப்பநிலையை பொறுத்தவரை, வடக்கு கடலோரம் அல்லாத மாவட்டங்களில் அதிகபட்சம் 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். நேற்று மாலை நிலவரப்படி, மாநில அளவில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்ஷியஸ்; அதாவது 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோவை, சேலம், திருப்பத்துார், திருத்தணி 38; நாமக்கல், பாளையங்கோட்டை 39; திருச்சி, மதுரை நகரம் 40; மதுரை விமான நிலையம் 41 என, 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த மாதத்தில் இருந்து, இம்மாதம் துவக்கம் வரை மாநில அளவில் 111 டிகிரி பாரன்ஹீட் வரையிலும்; 20க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் கோடை வெயில் சுட்டெரித்தது. சில நாட்களாக உச்சபட்ச வெப்பத்தின் அளவும், வெப்ப அலை வீச்சும் குறைந்துள்ளது. அதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.