சுங்கச்சாவடிகளுக்கான வருமானம் எவ்வளவு? 8 ஆண்டுகளாக மறைக்கும் தேசிய ஆணையம்!
சென்னை:சுங்கச்சாவடிகளின் ஆண்டு வருமானம் குறித்த தகவலை, எட்டு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிடாமல் மறைத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிருப்தி
ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுதோறும் வசூலாகும் கட்டண விபரத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட வேண்டும். இதற்கென, சுங்கச்சாவடிகளுக்கு தனியாக இணையதளத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழக சுங்கச்சாவடிகளில், 2016ம் ஆண்டு வரை வசூலான கட்டணம் குறித்த விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. சாலை அமைத்ததற்கான கட்டணத்தை வசூல் செய்தபின், சுங்கக் கட்டணத்தை 20 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் உள்ளது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கட்டண வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், 2023 - 24ம் ஆண்டு, 55,844 கோடி ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 4,221 கோடி ரூபாய் வரை வசூலாகி உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு, 3,817 கோடி ரூபாய் தான் வசூலாகி இருந்தது. நடவடிக்கை
சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மற்றும் கட்டண உயர்வால், ஒரே ஆண்டில், 404 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது. லோக்சபாவில் தி.மு.க., - எம்.பி., கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, இந்த பதிலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டது என தெரிவிப்பதில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டாலும், உரிய பதில் வருவதில்லை. மாநில அரசு தான் இப்பிரச்னையில் தலையிட்டு, தமிழகத்தில் வசூலாகும் சுங்கக் கட்டணம் குறித்த விபரத்தை பெற்று, சுங்கச்சாவடிகள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.