| ADDED : ஜூன் 26, 2024 03:33 AM
புதுடில்லி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.,க்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இதுதொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாக வெளியான செய்திகளின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.கள்ளச்சாராயம் குடித்த பெண்கள் உட்பட ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வதற்கான உரிமையை மீறும் கடுமையான பிரச்னை.மதுபானங்களின் உற்பத்தி, இருப்பு, வினியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்தும் தனி அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில், ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.