உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சித்தர்கள் சொன்னதையே போதித்தேன்: கைதான மகாவிஷ்ணு வாக்குமூலம்

சித்தர்கள் சொன்னதையே போதித்தேன்: கைதான மகாவிஷ்ணு வாக்குமூலம்

சென்னை: “சித்தர்கள் என்னிடம் சொன்னதையே மாணவ, மாணவியருக்கு போதித்தேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த என் பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது,” என, போலீசாரிடம் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளி, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்டவற்றில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக, சைதாப்பேட்டை போலீசாரால், ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, 30, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

காமெடியன்

போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்: பள்ளிகளில் நடந்த பேச்சு போட்டியில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளேன். 'டிவி' சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், 'ஸ்டாண்ட் அப் காமெடி'யனாக புகழ் பெற்றேன். அதன்பின், எனக்கு ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டது. அது தொடர்பான நுால்களை வாசித்து வந்தேன். சித்தர்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டேன்.கடந்த 2020ல், மனித உயிர்களை கொரோனா அச்சுறுத்திய போது, ஆன்மிகம் மற்றும் அறநெறி கருத்துகளை பேசி, 'யு டியூப்' வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டேன். அதன் பலனாக, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா என, பல நாடுகளில் உள்ள ஆன்மிக பற்றாளர்களின் நன்மதிப்பை பெற்றேன்.

கோபப்படுத்தாது

என் பேச்சு எவரையும் கெடுக்கும் வகையிலோ, கோபப்படுத்தும் வகையிலோ இருக்காது; சிந்திக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்.சித்தர்கள் வகுத்து தந்த வழியில் வாழ்ந்து வருகிறேன். என் சுய பரிசோதனையில் கிடைத்த ஞானத்தின் அடிப்படையில், பல நாடுகளுக்கும் சென்று பேசி வருகிறேன். கடந்த 2021ல், திருப்பூரில், 'பரம்பொருள் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை துவங்கி, ஆன்மிக தேடலுக்கான கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறேன்.உளவியல் ரீதியாக சிறைபட்டு சின்னாபின்னமாகி இருக்கும் மனித வாழ்வை மீட்டெடுப்பது தான் என் இலக்கு. அதற்காக, 'மகாவிஷ்ணு ஸ்ட்ரெஸ் பிரீ' என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். என் அன்பர்களுக்கு, 'குருவின் கருணை' என்ற பெயரில் ருத்திராட்சம், கருங்காலி மாலை உள்ளிட்ட பொருட்களை, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்தும் வருகிறேன்.சித்தர்கள் தான் நம் சொத்து. அவர்கள் வாழ்வியல் சார்ந்து ஏராளமான கருத்துகளை விட்டுச் சென்றுள்ளனர். அவர்களோடு தினமும் பேசுவேன். பாவ, புண்ணியம் குறித்து அவர்கள் சொன்ன கருத்தையே மாணவ, மாணவியரிடம் போதித்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து, மேலும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை