| ADDED : மே 11, 2024 12:03 AM
சென்னை:'ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு உயர்ந்துள்ளது' என, ஆவின் மேலாண் இயக்குனர் வினீத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவின் நிறுவனம், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப, 100க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகளை, 35 நேரடி பாலகங்கள் வழியாகவும், 1,000க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாளர்கள் வழியாகவும், பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், 'தினமலர்' நாளிதழில், திரவ நைட்ரஜன் பிரச்னை காரணமாக, ஆவினில் குல்பி, ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது. ஆவின் தன் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தேவை பட்டியலுக்கு ஏற்ப, ஐஸ்கிரீம் வினியோகம் செய்து வருகிறது. ஐஸ்கிரீம் விற்பனையானது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.தற்போது ஐஸ்கிரீம் வினியோகத்திற்கு, கூடுத லாக குளிர்சாதன வசதி உடைய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், திரவ நைட்ர ஜனானது, ஐஸ்கிரீம் உற்பத்தியிலோ அல்லது வினியோகத்திலோ பயன்படுத்துவது கிடையாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.