சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சட்டவிரோத கனிம குவாரி குறித்த புகாருக்கு எதிராக, விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜே.சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சட்டவிரோதமாக கனிம குவாரி நடக்கிறது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். கிருஷ்ணகிரியில் கனிமவள துணை இயக்குனராக பதவி வகித்த எல்.சுரேஷ் என்பவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ''இந்த மனு உள்நோக்கம் உடையது; தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை ஆராய வேண்டிய கடமை, நீதிமன்றத்துக்கு உள்ளது. உள்நோக்கத்துடன் புகார்கள் கொடுப்பதும் உண்டு. அந்த ஒரே காரணத்துக்காக, வழக்கை நிராகரிக்கக் கூடாது. ஏனென்றால், குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத கனிம குவாரி குறித்த குற்றச்சாட்டுகளை மனுதாரர் எழுப்பி உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை அப்படியே ஒதுக்கி விட முடியாது. எனவே, விரிவான மனுவை, கனிமவள ஆணையர், கலெக்டர், எஸ்.பி.,க்கு அனுப்ப வேண்டும். சட்டவிரோத கனிம குவாரி குறித்த புகாரை பெறும் பட்சத்தில், அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.