உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுதிறனாளியை கொன்றவருக்கு தண்டனையை குறைத்தது ஐகோர்ட்

மாற்றுதிறனாளியை கொன்றவருக்கு தண்டனையை குறைத்தது ஐகோர்ட்

சென்னை:மாற்று திறனாளி பெண் கொலை வழக்கில், பெண்ணுக்கு விதித்த ஆயுள் தண்டனையை, 10 ஆண்டாக குறைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த மாற்று திறனாளி பெண் வனிதா, பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது கணவர், பிரிந்து சென்று விட்டார். இவரது வீட்டின் அருகில் சர்மிளா பேகம் என்பவர் வசித்து வந்தார். வனிதாவுக்கு சளி தொந்தரவு இருக்கும் போது, சர்மிளா தான் மருந்து கொடுப்பார். தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக, வனிதாவிடம் இருக்கும் நகைகளை கொள்ளையடிக்க சர்மிளா திட்டமிட்டார்.சளிக்கான மருந்தில், பூச்சி மருந்து கலந்து கொடுத்ததில், வனிதாவுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவளது வாயையும், மூக்கையும் பொத்தியதில் உயிர் இழந்தார்.நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்தார். கால்களை வெட்டி எடுத்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு, போர்வையில் சுற்றி கால்வாயில் வீசினார். உடலை, வீட்டின் அருகில் மறைத்து வைத்தார்.இந்த சம்பவம், 2009 ஜூலையில் நடந்தது.கோபிச்செட்டிப் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை, கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றம் விசாரித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சர்மிளா பேகத்துக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சர்மிளா பேகம், மேல்முறையீடு செய்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கொலை செய்யும் நோக்கம் இல்லை; கொள்ளையடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். 13 ஆண்டுகள் சிறையில் உள்ளார்' என்றார்.மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, 'கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஆயுதம் எதையும் பயன்படுத்தவில்லை. சுயநினைவு இழக்க செய்ய வேண்டும் என்ற திட்டம் தோல்வி அடைந்ததால், பீதியில் இந்த செயலை செய்துள்ளார்.அதிகபட்ச தண்டனையாக, 10 ஆண்டு விதிக்கப்பட வேண்டும். எனவே, ஆயுள் தண்டனை என்பதை, 10 ஆண்டுகளாக மாற்றி உத்தரவிடுகிறோம்' என, கூறியுள்ளது. தண்டனை காலத்தை ஏற்கனவே அனுபவித்திருந்தால், உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை