உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணி இருந்திருந்தால் தி.மு.க.,வுக்கு ஒரு இடம் கிடைத்திருக்காது!

அ.தி.மு.க., கூட்டணி இருந்திருந்தால் தி.மு.க.,வுக்கு ஒரு இடம் கிடைத்திருக்காது!

சென்னை:''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இருந்திருந்தால், தி.மு.க.,வுக்கு ஒரு இடம் கூட இல்லாமல் போயிருக்கும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.சென்னை சாலிகிராம், ஆற்காடு ரோட்டில் மக்கள் தொடர்பு அலுவலகத்தை, தமிழிசை நேற்று திறந்து வைத்தார். பின், தமிழிசை அளித்த பேட்டி:தென் சென்னை மக்கள், நல்ல எம்.பி.,யை தேர்வு செய்யவில்லை. அங்கு போட்டியிட்ட என்னை மக்கள் தேர்வு செய்தாலும், செய்யாவிட்டாலும் நான் தான் தென் சென்னை தொகுதியின் எம்.பி., தொகுதியில் ஒரு எம்.பி., அலுவலகம் திறப்பதாக தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தேன். இனி, அந்த அலுவலகம் மக்கள் சேவை மையமாக செயல்படும். தொகுதியில் இருக்கும் அரசியல் சார்பற்ற இளைஞர்கள், மக்கள் பணியில் என்னோடு இணைந்து பயணிக்கலாம். முதல்வர் ஸ்டாலின் போன்றோர், தங்களின் இணையதளவாசிகளை அடக்கி வைக்க வேண்டும். தோல்வி என்பது அனைவருக்கும் தான் வரும். மறுபடியும், 'என்னை பரட்டை' என்று எழுத ஆரம்பித்துள்ளனர். இது, பரட்டை என்றாலும் அது ஒரிஜினல்தான். அ.தி.மு.க., உடன் பா.ஜ., கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.,வுக்கு இன்று இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது. ஒரு இடம் கூட இல்லாமல் போயிருக்கும். இது, கணக்கு ரீதியாக உண்மை. ஒரு போருக்கு செல்லும் போது வியூகம் அமைப்பது போல, கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஒன்றிணைந்து வெற்றிக்காக சில வியூகங்களை அமைத்தோம். அதை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏற்கவில்லை. கூட்டணி என்பது அரசியல் வியூகம். அதை, தி.மு.க., சரியாக பயன்படுத்தி வெற்றியடைந்திருக்கிறது. நான் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தது குறித்து, இணையதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர். நான் கவர்னர் பதவியில் இருந்தால் என்ன... தெருவில் வந்து அமர்ந்தால் என்ன?என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சி இணையதளவாசிகளை எச்சரிப்பதோடு, அதேபோல் செயல்படும் உள்கட்சி இணையதளவாசிகளையும் எச்சரிக்கிறேன். கட்சிக்கு உள்ளே உள்ள தலைவர்களை தவறாக எழுதி பதிவிட்டால், முன்னாள் மாநில தலைவர் என்ற முறையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் கருத்தை, கருத்தாக மட்டுமே இணையதளங்களில் பதிவு செயய வேண்டும். நான் கவர்னராக இருக்க வேண்டுமா, தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். வேறு யாருக்கும் அந்த பொறுப்பும் இல்லை; கடமையும் தேவையில்லை. நான் தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை